ஜெயகாந்தன்

2012ல் ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் இவராவார். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது.

மேற்கோள்கள்

 • இண்டெலெக்சுவல் என்பது படித்தவர்கள் இல்லை. சிந்திக்கிறவர்கள்.[1]
 • கர்நாடக இசை தக்களியில் நூல் நூற்பதைப் போன்றது. மேற்கத்திய இசை ஊடும் பாவுமாக தறி போட்டு துணி நெய்வதைப் போன்றது. [1]
 • எல்லோரையும் கேள்வி கேட்கிற தைரியத்தைக் கொடுத்தவர் நீங்கள் தான். உங்களிடமே கேள்வி கேட்டுத் தொடங்குகிறேன்.
 • ஆதிக்கம் தான் எதிரியே தவிர யாருடைய ஆதிக்கம் என்பது பொருட்டல்ல. ஆதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் தான் ஜனநாயகத் தன்மை வளரும். இந்த ஆதிக்கத்திற்குப் பதிலாக , அந்த ஆதிக்கம் என்று சொல்வது மாற்றாகாது. அது ஆதிக்கக் காரர்களுக்கிடையே நடந்த போட்டி என்று தான் நான் நினைக்கிறேன். படித்த மேல் வர்க்கத்து முதலியார்களுக்கும், பிராமணர்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் எனக்குச் சம்பந்தமில்லை, உழைக்கிற, பாடுபடுகிற பிராமணர்களும் இருக்கிறார்கள். வஞ்சிக்கப் படுகிற , சுரண்டப் படுகிற பிராமணர்களும் இருக்கிறார்கள்.
  • தந்தை பெரியாரின் பிராமண ஆதிக்க எதிர்ப்பைப் பற்றிக் கேட்ட பொழுது கூறியது.[2]
 • ஒளரங்க சீப் பண்ணின கொடுமைக்கு, இன்றைக்கு உள்ள முஸ்லீம்களைப் பகைத்தால் எப்படி ? பிராமணக் கொடுமை என்றைக்கோ நடந்தது என்பதற்காக, இன்று வளர்ந்து, மாறிவந்திருக்கும் பிராமணர்கள் மீது பகைமை கொள்ளத் தூண்டுவது சரியாகாது. இலக்கிய தர்மமாகாது. அரசியலுக்கு வேண்டுமானால் அது அவசியமாய் இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால் முதலாளி தொழிலாளி விஷயத்தையும் நான் இப்படித் தான் பார்க்கிறேன். 18-ம் நூற்றாண்டின் முதலாளித்துவம் அழிந்து விட்டது . இன்றுள்ள நவீன , வளர்ந்திருக்கும் முதலாளித்துவம் சோஷலிசத்தை விட முற்போக்காக இருக்கிறது. இன்றைக்கு முதலாளித்துவம் அழிந்து தான் தொழிலாளி வர்க்கம் வளர வேண்டுமென்பதில்லை. இரண்டும் இணைந்து, உலகத்தை வளர்க்கிற ஒரு போக்கு இருக்கிறது. Harmonisation தான் முக்கியம். பகைமையை வளர்ப்பது இலக்கியப் பண்பாகாது.[2]
 • கம்யூனிஸ்ட்கள் ஆட்சி அமைத்தால், அவர்களும் ஆளும் வர்க்கமாகி, இன்னும் சொல்லப் போனால் இன்னும் கொடிய ஆளும் வர்க்கமாகி விடுவார்கள். அதிலிருந்து அவர்கள் விடுபட்டிருக்கிறார்கள். கம்யூனிஸ ஆட்சி தான் அழிந்தது. கம்யூனிஸக் கருத்துகள் அழியவில்லை.
  • கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸம் அழிந்ததன் காரணம் பற்றிக் கேட்ட பொழுது கூறியது.[3]
 • சிறுகதை உரைநடையில் எழுதப் படுகிற கவிதை. கவிஞன் தான் சிறுகதை எழுத முடியும். [3]
 • கொட்டாவி விடும்போது என்னைப் படம் எடுத்து விட்டு எப்போதும் கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பேன் என்று நினைத்தால் தவறு.[3]
 • காலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம். நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்.[4]
 • இடதுசாரி இயக்கத்தைச் சுயநலம் செல்லரித்துவிட்டது.[4]
 • மகத்தான சாதனை - பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தது. மிகப் பெரிய சவாலும் அதுவே.[4]
 • குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வரக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனைய சமூகங்களின் ஆக்கபூர்வ விஷயங்கள் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக தமிழ் வெறியை விட்டொழிக்க வேண்டும்.[4]

வெளியிணைப்புக்கள்

சான்றுகள்

 1. 1 2 ஜெயகாந்தனுடன் ஓர் உரையாடல் - 1. திண்ணை (17 செப்டம்பர் 2000). Retrieved on 4 சூன் 2016.
 2. 1 2 3 ஜெயகாந்தன் பேட்டி. தின்னை. Retrieved on 4 சூன் 2016.
 3. 1 2 3 ஜெயகாந்தன் திண்ணைக்கு அளித்த பேட்டி. திண்ணை (1 அக்டோபர் 2000). Retrieved on 4 சூன் 2016.
 4. 1 2 3 4 சமஸ் (26 செப்டம்பர் 2013). சபை இல்லாமல் நான் இல்லை: ஜெயகாந்தன். தி இந்து. Retrieved on 4 சூன் 2016.
This article is issued from Wikiquote. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.